மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு


மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 15 Jun 2023 1:15 AM IST (Updated: 15 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோடை விடுமுறை

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் வெளியூர்களுக்கு சென்றனர். இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து இந்த மாதம் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கத்தரி வெயில் முடிந்தும் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பள்ளிக்கூடங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து 1 வாரம் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 12-ந் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 14-ந் தேதியும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

பள்ளிகள் திறப்பு

அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் நேற்று 1முதல் 5-ம் வகுப்புகளுக்கான 1,081 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. எல்.கே.ஜி., யூ.கே.ஜி. போன்ற மழழையர் பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிக்கூடங்கள் திறப்பையொட்டி பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சீருடை அணிவித்து புத்தகப்பையை மாட்டிவிட்டு பள்ளிக்கு அழைத்து சென்றனர்.

மாணவ-மாணவிகளும் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. செல்லும் சில குழந்தைகள் மட்டும் நீண்ட நாட்களாக விடுமுறையில் இருந்ததால் பெற்றோரை விட்டு பிரிய மனமின்றி பள்ளிக்கு செல்ல அடம் பிடித்தனர். அவர்களையும் பெற்றோா்களும், ஆசிரியர்களும் தேற்றி வகுப்புகுள் அனுப்பிவைத்தனர். பள்ளிகளில் வழக்கமான காலை நேர பிரார்த்தனைக்கு பிறகு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் பூக்கள் கொடுத்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக வரவேற்றனர். ஒரு அரசு பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி சுமதி நேரில் சென்று பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் பாடங்கள் நடத்த மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பாடங்களைப் படிக்க தொடங்கினர். பாட இடைவேளையின் போது பல மாணவ-மாணவிகள் விடுமுறையின் போது, தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வந்த அனுபவம் குறித்து ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

பரபரப்பான சாலைகள்

கடந்த 2 மாதங்களாக பள்ளி மாணவ-மாணவிகள் இன்றி காலை மற்றும் மாலையில் சாலைகள் வெறிச்சோடின. ஆனால் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதும் கோவையில் உள்ள முக்கிய சாலைகள் காலையில் மிகவும் பரபரப்பாகவே காணப்பட்டன. வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story