தொழில் நகரமாக மாற்ற தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும்-கலெக்டர்


தொழில் நகரமாக மாற்ற தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும்-கலெக்டர்
x

திருப்பத்தூர் மாவட்டத்தை தொழில் நகரமாக மாற்ற தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தை தொழில் நகரமாக மாற்ற தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

கடன் வழங்கும் முகாம்

திருப்பத்தூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் தொழில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பாஸ்கரன் வரவேற்றார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, திட்ட பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பிலான கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அரசின் திட்டங்கள் பொது மக்களையும், பயனாளிகளையும் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும், அரசு உதவிகள் கிடைப்பதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் வேறு ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த கடன் வழங்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி

உங்கள் குறைகளை இங்கு வந்திருக்கும் அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களிடம் நேரடியாக தெரிவித்து பயனடையலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில்தான் இருக்கிறது. எனவே, தொழில் முனைவோர்கள் தான் மேற்கொண்ட தொழிலை சிறப்பாகவும், லாபகரமாகவும் நடத்தி வங்கியில் பெற்ற கடனை முறையாக திருப்பி செலுத்த வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தை தொழில் நகரமாக மாற்ற தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடா்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட தொழில் மையத்தோடு ஒருங்கிணைந்து சிறப்பாக செயலாற்றிய வங்கிகளுக்கு நினைவு பரிசு வழங்கினார். இதில் தொழில் முனைவோர்கள், வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story