ரவுடிகளை அழைத்து வந்து கட்சியினரை ஓ.பன்னீர் செல்வம் தாக்கியது கண்டிக்கத்தக்கது- எடப்பாடி பழனிசாமி கோபம்


ரவுடிகளை அழைத்து வந்து கட்சியினரை ஓ.பன்னீர் செல்வம் தாக்கியது கண்டிக்கத்தக்கது- எடப்பாடி பழனிசாமி கோபம்
x

நீதிமன்றம் மூலம் நியாயத்தை பெற்று, அதிமுக தலைமை அலுவலகத்தை மீண்டும் திறப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், திட்டமிட்டபடி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. இரட்டை தலைமை பதவியை ரத்து செய்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்தபின்னர், எடப்பாடி பழனிசாமி, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதலில் காயமடைந்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அ.தி.மு.க.வினரை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரவுடிகளை அழைத்து வந்து கட்சியினரை ஓ.பன்னீர்செல்வம் தாக்கியது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க.வில் உயர்ந்த பதவியை வகித்த ஓ.பன்னீர் செல்வம் செய்தது மிகப்பெரிய துரோகம் .காவல்துறையினர் ரவுடிகளுடன் சேர்ந்து கட்சியினரை தாக்கி உள்ளனர் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு சீல் வைத்துள்ளனர்.

எந்த ஒரு தலைவராவது தனது கட்சியினரை தாக்குவார்களா? ஓ.பன்னீர் செல்வத்தை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், ஒருங்கிணைப்பாளராக ஆக்கியதற்கு அவர் தகுந்த வெகுமதியை தந்துள்ளார்.அடிபட்ட நிர்வாகிகள் தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவி தந்தது;அவர்களை கொடூரமான முறையில் தாக்கியுள்ளார் அவர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் நுழைவதாக தகவல் வந்த உடன் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை" என்றார்.


Next Story