குடிபோதையில் ஏற்படும் வாகன விபத்துகளில் உடன் பயணிப்பவருக்கும் குற்றத்தில் சமபங்கு - ஐகோர்ட்டு உத்தரவு


குடிபோதையில் ஏற்படும் வாகன விபத்துகளில் உடன் பயணிப்பவருக்கும் குற்றத்தில் சமபங்கு - ஐகோர்ட்டு உத்தரவு
x

குடிபோதையில் ஏற்படும் வாகன விபத்துகளில் உடன் பயணிப்பவருக்கும் குற்றத்தில் சமபங்கு உள்ளது என ஐகோர்ட்டு உத்தரவு வழங்கியது.

சென்னை

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான அன்பு சூர்யா, தனது நண்பர் செபாஸ்டியன் கிருஷ்ணன் மற்றும் தனது சகோதரி டாக்டர் லட்சுமியுடன் அதிகாலையில் காரை வேகமாக ஓட்டி வந்தார். இந்த கார் மெரினா கடற்கரை முன்புள்ள காமராஜர் சாலையில் வேகமாக வந்தது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது. இதில், 2 மீனவர்கள், ஒரு போலீஸ்காரர் பலியானார்கள். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் விசாரணையில், காரை ஓட்டிய அன்பு சூர்யா குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரை ஓட்டிய அன்பு சூர்யா உள்பட 3 பேர் மீதும் குற்றம் சாட்டி, குற்றப்பத்திரிகையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதையடுத்து, தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் டாக்டர் லட்சுமி மனு தாக்கல் செய்தார்.

அதில், 'காரில் பயணம் செய்த தான் குடிக்கவில்லை' என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தனது சகோதரர் குடிபோதையில் காரை ஓட்டுவதை தடுக்காமல் குற்றத்துக்கு மனுதாரர் உடந்தையாக செயல்பட்டுள்ளார். அதனால் அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

குடிபோதையில் ஏற்படும் வாகன விபத்துகளில், குடிபோதையில் இருக்கும் டிரைவர் மட்டுமல்ல, அந்த வாகனத்தில் உடன் பயணிப்பவர்களுக்கும் குற்றத்துக்கு சமமான பங்கு மற்றும் பொறுப்பு உள்ளது. எனவே இந்த வழக்கில் இருந்து டாக்டர் லட்சுமியை விடுவிக்க முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story