கல்வராயன்மலை வனப்பகுதியில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு போலீசார் நடவடிக்கை
கல்வராயன்மலை வனப்பகுதியில் போலீசார் நடத்திய சாராய வேட்டையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
சாராயவேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள வாழப்பாடி, கீழப்பாடி உள்ளிட்ட கிராமப்புற வனப்பகுதிகளில் சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி வெளியூர்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் கரியாலூர் போலீசார் இணைந்து வாழப்பாடி, கீழப்பாடி ஆகிய கிராம வனப்பகுதிகளில் அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீஸ் விசாரணை
அப்போது வாழப்பாடி வனப்பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக மூலப்பொருட்களுடன் 17 பேரல்களில் 3,400 லிட்டர் ஊறல் அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறலை கைப்பற்றி, அதே இடத்தில் கீழே கொட்டி அழித்தனர். மேலும் போலீசார், அங்கு சாராய ஊறல் அமைத்த நபர்கள் யார்? என விசாரித்து வருவதோடு, அவர்களை வலைவீசி தேடியும் வருகின்றனர்.