பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவராக எர்ணாவூர் நாராயணன் நியமனம்


பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவராக எர்ணாவூர் நாராயணன் நியமனம்
x

தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவராக எர்ணாவூர் ஏ.நாராயணனை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பனைமர தொழிலாளர்களின் நலனுக்காக கடந்த 2006-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நலவாரியம் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு கல்வி, மகப்பேறு, திருமணம், விபத்து உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாரியம், 2010-ம் ஆண்டு குமரி அனந்தனை தலைவராக கொண்டு இறுதியாக திருத்தியமைக்கப்பட்டு, வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் 18.8.2012 அன்றுடன் முடிவடைந்தது.

பனைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நலவாரியம் திருத்தியமைக்கப்பட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 14.6.2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தலைவராக ஏ.நாராயணன்

இந்த அரசாணையின்படி, ஏ.நாராயணன் தலைவராகவும், அலுவல்சாரா உறுப்பினர்களாக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், தொழிலாளர் ஆணையர், தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் முதன்மைச்செயல் அலுவலர், தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் முதன்மைச்செயல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும், அலுவல்சாரா உறுப்பினர்களாக வேலையளிப்போர் பிரதிநிதிகளாக அக்ரி கா.பசுமைவளவன், எம்.அந்தோணி ஸ்டீபன், எஸ்.காட்சன் சாமுவேல், ஜி.கலாவதி, டி.ஆன்டோ பிரைடன், தொழிலாளர் பிரதிநிதிகளாக சி.ஞானதாஸ், பி.சிங்காரன், ஆர்.சடையப்பன், டி.பழனிசாமி, ஏ.எஸ்.வி.காங்கிரஸ் எடிசன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story