ஈரோடு: நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - வாலிபர் பலி
பெருந்துறை சிப்காட் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியை சார்ந்த தெய்வசிகாமணி என்பவரது மகன் நந்தகுமார் (வயது 28). இவரது நண்பர்கள் கார்த்திகேயன்(29), சுரேஷ்குமார் (34), மணிவண்ணன் (27) . இவர்கள் மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நான்கு பேரும் நேற்று இரவு சாப்பிடுவதற்காக சரலை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை நந்த குமார் ஓட்டி வந்துள்ளார். அப்போது சென்னைக்கு பிஸ்கட் லோடு ஏற்றி வந்த லாரியை டிரைவர் சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றுள்ளார்.
இந்நிலையில் இவர்கள் வந்த கார் எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து தொடர்பாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து காரில் சிக்கி இருந்த நான்கு பேரையும் மீட்டனர்.
உடனே அவர்களை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.