ஈரோடு இடைத்தேர்தல்; காங்கிரசுக்கு ஆதரவு - எதிர்ப்பு தெரிவித்து கமல் ரசிகர்கள் போஸ்டர்..!


ஈரோடு இடைத்தேர்தல்; காங்கிரசுக்கு ஆதரவு - எதிர்ப்பு தெரிவித்து கமல் ரசிகர்கள் போஸ்டர்..!
x

ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ. வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தொகுதியில் அ.தி.மு.க. எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்துள்ளது.

தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோரி இருந்தார். இதற்கிடையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டர்களில் "ஆதரவு ஈவோரை விலக்கு, இன்றைய இலக்கு, ஈரோடு கிழக்கு, இந்த மாதிரி நேரத்தில் நம்மவர் சொல்லுற வார்த்தை பார்த்துக்கலாம். தனியே களம் காண்போம், நம்பிக்கையே நம் பலம்" போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக கமல் அறிவித்துள்ள நிலையில், தனித்து போட்டியிட வேண்டும் என்று கமல் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story