ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு துவங்கியது


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு துவங்கியது
x
தினத்தந்தி 26 Feb 2023 11:56 PM GMT (Updated: 27 Feb 2023 1:40 AM GMT)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு துவங்கியது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடந்தது. பரிசீலனையின்போது 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 6 வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். கடந்த 10-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 20 நாட்கள் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர்.

இதையொட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் பணியில் உள்ளனர். இதில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் ரோந்துப்பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும், வெப் கேமராக்களும் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.

காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்க உள்ளநிலையில், ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தற்போது துவங்கியது. மாதிரி வாக்குப்பதிவு முடிவடைந்தபிறகு மின்னணு இயந்திரங்கள் மீண்டும் சரி செய்யப்பட்டு 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது.


Next Story