ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா
ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவிலில் யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது.
விழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். இரவில் அன்னபறவை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து சாமியின் திருவீதி உலா நடந்தது.
திருக்கல்யாணம்
விழாவையொட்டி தினமும் காலையில் யாகசாலை பூஜையும், திருமஞ்சனமும் நடைபெறுகிறது. இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்திலும், நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு கருட வாகனத்திலும், வருகிற 24-ந் தேதி இரவு 7 மணிக்கு யானை வாகனத்திலும் சாமியின் திருவீதிஉலா நடைபெற உள்ளது. 25-ந் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
வருகிற 26-ந் தேதி காலை 7.15 மணிக்கு தேரில் பெருமாள் எழுந்தருளிகிறார். 8.45 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து செல்கின்றனர். கோவிலில் இருந்து தொடங்கும் தேரோட்டம் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, பெரிய மாரியம்மன் கோவில், காந்திஜிவீதி வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிலை சேர்கிறது. 27-ந் தேதி இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் சாமியின் திருவீதிஉலா நடக்கிறது. 28-ந் தேதி மாலை 6 மணிக்கு சேஷ வாகனத்தில் தெப்ப உற்சவம் கோவிலின் தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது. 29-ந் தேதி இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்படுகிறது. அன்றைய தினம் நடக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.