ஈரோடு கால்நடை சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்
ஈரோடு கால்நடை சந்தையில் நேற்று மாடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.
ஈரோடு கால்நடை சந்தையில் நேற்று மாடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.
மாட்டுச்சந்தை
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை கூடி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 100 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, சேலம், தேனி, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனர். 350 பசு மாடுகள், 300 எருமை மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
கோமாரி நோய்
இதில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.62 ஆயிரம் வரையிலும் விலை போனது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை பிடித்து சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றார்கள்.
இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, 'கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக கோமாரி நோய் தாக்கம் அதிகமாக இருந்ததால் அங்கு செயல்பட்டு வந்த மாட்டுச்சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
பால் விலை உயர்வு
தற்போது கோமாரி நோய் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, கடந்த வாரம் முதல் தனியார் மாட்டு சந்தைகள் மட்டும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் கர்நாடகா வியாபாரிகள் அதிகமாக சந்தைக்கு வந்திருந்தனர்.
மேலும் தமிழகத்தில் பால் விலை உயர்வால், மாடுகளை பிடிக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே நேற்று கூடிய சந்தையில் பசு மற்றும் எருமை மாடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. இதன் காரணமாக 90 சதவீத மாடுகள் விற்பனை ஆனது.