ஈரோடு: ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - போலீஸ் விசாரணை
ஈரோடு அருகே தொழில் போட்டியால் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு அடுத்த சித்தோடு அருகே நசியனூரில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அர்ஜுனன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அதே பகுதியில் மற்றொருவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இருவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் அர்ஜுனன் வழக்கம்போல் ஓட்டலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று அதிகாலை அர்ஜுனன் ஓட்டல் முன்பு கார் ஒன்று வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் ஓட்டலின் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளார். பெட்ரோல் குண்டு வீசியதும் பயங்கர சத்தத்துடன் அது வெடித்து ஓட்டல் தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்தவர்கள் இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கும், பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 30 நிமிடம் போராடி தீயணைத்தனர். எனினும் கடையின் முன் பகுதியில் இருந்த 2 பிரிட்ஜ்கள், மேற்கூரை எரிந்து சேதமடைந்தது.
சம்பவ இடத்திற்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜானகிராமன் சென்று விசாரணை நடத்தினார். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவி பிடிக்கவில்லை.
கடையின் முன்பு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது இன்று அதிகாலை காரில் இருந்து இறங்கி வந்த மரம் நம்பர் ஒருவர் பெட்ரோல் குண்டை ஓட்டல் மீது வீசியது பதிவாகி இருந்தது. அதில் அந்த நபரின் முகம் தெளிவாக தெரிந்தது அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றது தெரிய வந்தது. ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.