ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் விழாவுக்காக குவிந்த பெண்கள்


ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் விழாவுக்காக குவிந்த பெண்கள்
x

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் குவிந்த குடும்ப பெண்கள் ஆட்டம்-பாட்டத்துடன் நடனமாடி காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

ஈரோடு,

காணும் பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. பெண்கள் மட்டுமே கொண்டாடும் மிக சிறப்பான காணும் பொங்கல் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் கொண்டாடப்படுவது வழக்கம்.

நேற்று பகல் 11 மணியில் இருந்தே பெண்கள் வ.உ.சி. பூங்கா நோக்கி வரத்தொடங்கினார்கள். மதியத்துக்கு மேல் கும்பல் கும்பலாக பெண்கள் கூட்டம் பூங்காவை மொய்த்தது.

தொடக்கத்தில் பூங்காவுக்குள் சென்ற பெண்கள் சிறிது நேரம் காலாற நடந்து விட்டு, தாங்கள் கையில் கொண்டு வந்த கரும்பு மற்றும் உணவுகளை தங்கள் உறவு பெண்கள், தோழிகளுடன் சேர்ந்து சாப்பிட்டனர். இளம்பெண்கள் வழக்கம்போல செல்பி எடுக்க, போட்டியாக குடும்ப பெண்களும் செல்பி எடுக்க தொடங்கினார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர சேர கொண்டாட்டம் களை கட்டத்தொடங்கியது. பூங்காவுக்குள் குத்தாட்டம் போடும் வகையில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. இதனால் பெண்கள் உற்சாகமாக ஆட்டம் போட தொடங்கினார்கள்.

குடும்ப பெண்களின் ஆட்டம்

முதலில் குழந்தைகள், அடுத்து இளம் பெண்கள் என்று தொடங்கிய ஆட்டம் ஒரு கட்டத்தில் குடும்ப பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கல்லூரி மாணவிகளுக்கு நிகராக குடும்ப பெண்கள் சளைக்காமல் ஆட்டம்போட்டனர்.

ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பூங்காவில் குவிந்தனர். ஆண்கள் யாரும் இல்லாததால், குறிப்பாக தங்களுக்கு தெரிந்த ஆண்கள், குடும்ப நண்பர்கள் என்று எந்த வகையிலும் தங்களுக்கு தெரிந்தவர்கள் இல்லை என்பதே பெண்களின் உற்சாகத்துக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது. சில கும்பல்களில் மாமியார், மருமகள், பேத்தி என்று பலரும், அம்மா, மகள், பேத்தி என்றும் பலர் குடும்பம் குடும்பமாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல்

இதேபோல் சேலம் ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டியிலும் காணும் பொங்கலையொட்டி ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையம், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், திருச்சி முக்கொம்பு காவிரி கரை பகுதிகளிலும் காணும் பொங்கல் நேற்று களை கட்டியது.


Next Story