மழை விட்டு 4 நாட்கள் ஆகியும் பாரிவாக்கத்தில் இடுப்பளவு தண்ணீரில் தத்தளிக்கும் பொதுமக்கள்
மழை விட்டு 4 நாட்கள் ஆகியும் பாரிவாக்கத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாம குடியிருப்புவாசிகள் தத்தளிக்கின்றனர்.
பூந்தமல்லி ஒன்றியம், பாரிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மாருதி நகர், ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பாரிவாக்கம் ஏரியின் உபரி நீர் செல்லும் பகுதிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளதால் ஏரி நீரானது குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்துள்ளது.
தற்போது மழை நின்று 4 நாட்கள் ஆகியும் இடுப்பளவு தண்ணீர் இங்கு தேங்கி இருப்பதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் பரிதவிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு சென்று வர தற்காலிக படகை பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும் தேங்கியுள்ள மழைநீரில் கழிவு நீரும், ரசாயன கழிவுநீரும் கலந்துள்ளதால் கால்களில் அரிப்பு ஏற்படுவதாகவும், ஏரியிலிருந்து வெளியேறக்கூடிய வழிகள் அடைக்கப்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.