தொண்டர்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள்; ஓ.பி.எஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாது-எடப்பாடி பழனிசாமி


தொண்டர்கள் ஏற்றுகொள்ளமாட்டார்கள்; ஓ.பி.எஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாது-எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 8 Sept 2022 12:41 PM IST (Updated: 8 Sept 2022 4:41 PM IST)
t-max-icont-min-icon

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் சோதனை ஏற்படும் போதெல்லாம் சாதனை படைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை

கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை அலுவலகத்திற்கு அலுவலகத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தி்ல எங்கள் சாமி எடப்பாடி பழனிச்சாமி என முகப்பு பேனர் வைத்து, அலுவலகம் வரவுள்ள கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கட்சியினர் திரண்டனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லத்திலிருந்தே வரவேற்பு அளிக்கப்படது. 72 நாட்களுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி.எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அறைகளையும் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.புதிதாக நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது அ.தி.மு.க.வை சிதைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நமது வெற்றி ஒரு பாடமாக இருக்கும். பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறோம் என கூறினார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

நீதிமன்ற உத்தரவுபடி அதிமுக தலைமை அலுவலகம் எங்கள் தரப்புக்கு தரப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் கட்சியின் நலன் கருதி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.

பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அத்துமீறி கட்சி அலுவலகத்தில் சிலர் நுழைந்தனர். அ.தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தோம்.

வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது புகார் அளித்தோம், தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நீதிமன்றத்தை நாடினோம் நீதிமன்றமும் உத்தரவிட்டது. நேற்று தான் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் சோதனை ஏற்படும் போதெல்லாம் சாதனை படைத்துள்ளது.அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும்.

அ.தி.மு.க.வில் பிளவு என்பது கிடையாது. சிலர் துரோகம் செய்தார்கள் அவர்கள் மீது பொதுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நீக்கப்பட்டார்கள். ஓ.பி.எஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறினார்.


Next Story