கால்வாய்களை கூட தி.மு.க. அரசு தூர்வாரவில்லை


கால்வாய்களை கூட தி.மு.க. அரசு தூர்வாரவில்லை
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு நிதி ஒதுக்கியும் கால்வாய்களை கூட தி.மு.க. அரசு தூர்வாரவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

கன்னியாகுமரி

தக்கலை:

மத்திய அரசு நிதி ஒதுக்கியும் கால்வாய்களை கூட தி.மு.க. அரசு தூர்வாரவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

நடை பயணம்

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 28-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபயணத்தை தொடங்கிய அவர் கடந்த 15-ந் தேதி குமரி மாவட்டம் வந்தார். குமரி மாவட்டத்தில் மட்டும் 3 நாட்களில் 6 சட்டசபை தொகுதிகளில் நடைபயணம் செல்கிறார். முதல் நாள் நடைபயணமானது விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் சட்டசபை தொகுதிகளில் நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் ஓய்வு எடுத்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் பத்மநாபபுரம் சட்டசபை தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். சாமியார்மடத்தில் இருந்து காலை 10 மணிக்கு நடைபயணத்தை தொடங்கிய அவர் பகல் 12.30 மணிக்கு மணலி சந்திப்பை வந்தடைந்தார். வரும் வழியில் ஒரு டீ கடையில் அவர் டீ குடித்தார். கல்லுவிளை பகுதியில் வந்தபோது அங்குள்ள முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பெண்கள் அண்ணாமலையை சூழ்ந்து மது கடைகளை மூடுங்கள் என கோரிக்கை வைத்தனர். மேலும் இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர் திறந்த வாகனத்தில் நின்று பேசியபோது கூறியதாவது:-

600 லோடு கனிம வளங்கள்

குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் 600 லோடு கனிமவளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இப்படியே போனால் குமரி மாவட்டம் அதன் தன்மையை இழந்துவிடும். இதற்கு பரிசாக கேரள மருத்துவக் கழிவுகளை இங்கும், தென்காசியிலும் கொட்டுகிறார்கள். 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களிலும், 28 டன்னுக்கு அதிகமாகவும் கனிமவளங்களை கொண்டு செல்லக்கூடாது என்று கடந்த மாதம் 23-ந் தேதி அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்தார். ஆனால் சிலரை தூண்டிவிட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு அந்த ஆணை நிறுத்தி வைக்கப்பட்டது.

அதேநேரம் கோர்ட்டு பிறப்பித்த ஆணையை எதிர்த்து அமைச்சர் மனோதங்கராஜ் ஏன் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகவில்லை.

விவசாயிகள் பிரச்சினை

எல்லா இடத்திலும் தண்ணீர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை இருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 35-வது வாக்குறுதியாக வாழைப்பழத்துக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் கொடுக்கவில்லை. அதே போல நெல் குவிண்டலுக்கு ரூ.2,500, கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் கொடுப்பதாக கூறிவிட்டு கொடுக்கவில்லை. விவசாயிகளின் எதிரியாக தி.மு.க. உள்ளது.

காமராஜர் 12 அணைகள் கட்டினார். ஆனால் கால்வாய்களை கூட தி.மு.க. அரசால் தூர்வார முடியவில்லை. கால்வாய்களை கடைவரம்பு வரை தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்கியும் அவை தூர்வாரப்படவில்லை. டாஸ்மாக் மதுக்கடையை மூடுங்கள் என தாய்மார்கள் சொன்னார்கள். ஆனால் நீர் இன்றி அமையாது உலகு என்ற பழமொழியை பீர் இன்றி அமையாது உலகு என்று நினைத்துக்கொண்டு மது விற்கிறார்கள்.

சாதி கலாசாரம்

தமிழகத்தில் 10 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் சரியில்லை என்று அரசே கூறியுள்ளது. பள்ளிகளில் சாதி கலாசாரம் உள்ளது. நாங்குநேரியில் சாதியால் மாணவர் மீது தாக்குதல் நடந்துள்ளது.

கையால் தொட்டு ஏற்றவேண்டிய தேசியகொடியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பட்டனை அழுத்தி ஏற்றுகிறார். தி.மு.க. எம்.எல்.ஏ. ஏற்றிய கொடி தலையில் வந்து விழுந்தது.

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 18 வகையானவர்களை விஸ்வகர்ம என்று கூறி அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வட்டி இல்லாமல் கடன் வழங்கப்பட உள்ளது. 2-வதாக ஒரு லட்சம் ரூபாய் 5 சதவீதம் வட்டியில் கொடுக்கப்படும். செப்டம்பர் 17-ந் தேதி அந்த திட்டம் அமலுக்கு வருகிறது.

குமரி மாவட்டத்தை சேர்ந்த தர்ஷிணி என்ற ஏழை மாணவி நீட் தேர்வில் 396 மதிப்பெண்கள் பெற்று விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட்டை வைத்து அரசியல் செய்கிறார். 2024-ம் ஆண்டு தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. சாமானியனுக்கும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்குமான தேர்தல். இங்குள்ள விஜய்வசந்த் எம்.பி. 80 சதவீதம் நேரம் சென்னையில் இருக்கிறார். ராகுல்காந்தி பாத யாத்திரையில் மக்கள் மத்தியில் தென்பட்டார். இங்கு சாலை போட்டிருக்கிறாரா? அணை கட்டிக்கொடுத்தாரா? எதுவும் செய்யவில்லை.

பொய் பிரசாரம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் மீனவர்களுக்கு வீடு கட்டி தருவதாகவும், மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை அதிகாித்து தருவதாகவும் கூறினார். ஆனால் அதை செய்யவில்லை. தற்போது ராமநாதபுரத்தில் மீனவர் மாநாட்டை மு.க.ஸ்டாலின் நடத்துகிறார்.

மீனவர்களை பாதுகாப்பவர் மோடி. சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக மீனவர்களுக்காக ஒரு அமைச்சகம் கொண்டு வந்தார். மீனவர்களை மீன் விவசாயி என்று அறிவித்து விவசாயிகளுக்கான திட்டங்களை கொண்டு சேர்த்தார்.

குமரி மாவட்டத்தில் ரப்பர் உதிரி பாகங்கள் தயாரிப்போம், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்போம் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை. மணிப்பூரை வைத்து பொய் பிரசாரம் செய்கிறார்கள். எனவே வருகிற தேர்தலில் வரலாற்று வெற்றியை பெற்று தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டிராக்டர் ஓட்டினார்

பின்னர் தக்கலை அருகே குமாரபுரம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று சொட்டுநீர் பாசம் மூலம் விவசாயம் செய்வதை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்டரை சிறுது தூரம் ஓட்டி சென்றார்.

மாலை 6 மணிக்கு தக்கலையில் இருந்து வில்லுக்குறிக்கு நடைபயணம் மேற்கொண்டார். வழியில் குமாரகோவில் சந்திப்பில் உள்ள குமரி பாலன் குடியில் பாலனின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

நடைபயணத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.வேலாயுதம், மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாவட்ட தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் பா.ரெஜின், பிரசார பிரிவு மாவட்ட தலைவர் பவானி எட்வின் ஜோஸ் உட்பட ஏராளமான நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story