மாதந்தோறும் தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்

மாதந்தோறும் தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று கோவையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை, ஜூன்.14-
மாதந்தோறும் தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று கோவையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ஊழல் பட்டியல்
கோவை வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டெல்லியில் அமலாக்கத்துறை சட்டத்திற்கு உட்பட்டு நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்து இருக்கின்றனர். இதற்காக டெல்லி ஸ்தம்பிக்கும் அளவிற்கு காங்கிரஸ் கட்சியினர் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நான் மின்துறை குறித்து பொய்யான தகவலை கூறுவதாக சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார்.
மாதந்தோறும் தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். நியூட்ரிசியன் கிட் டெண்டர் ஏன் இதுவரை திறக்கப்படவில்லை. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏன் சமீபகாலமாக நிருபர்களை சந்திக்க வில்லை.
போதை பொருட்கள் அதிகரிப்பு
போலீஸ் நிலையங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்தது குறித்து முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். அவர் போலீஸ் நிலையங்களுக்கு ஆய்வுக்கு சென்ற பிறகுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது.
கோவையில் தி.மு.க. கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்து விடும் அளவிற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் மோசமாக உள்ளது. தமிழகத்தில் கஞ்சா உள்பட அனைத்து போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்து உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என யார் கொண்டு வந்தாலும் தமிழக அரசு எதிர்க்க வேண்டும். அதற்கு பா.ஜ.க. துணை நிற்கும்.
பா.ஜனதாவை வளர்க்க பாடுபடுகிறோம்
அ.தி.மு.க.வுடன் எதிர்கட்சிக்கு போட்டி போடும் மனப்பான்மை பா.ஜ.க.விற்கு கிடையாது. பா.ஜ.க.வை வளர்க்க பாடுபடுகிறோம். சசிகலாவை பா.ஜனதாவில் இணைப்பது என்ற விவகாரத்தில் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வின் மனது புண்படும்படி பா.ஜ.க.வின் செயல்பாடு இருக்காது.
தமிழக அரசில் துறை செயலாளர்களை மாற்றுவதால் எந்த பலனும் இல்லை. அமைச்சர்களை மாற்றினால் எதாவது பலன் இருக்கும். கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன் சம்மந்தப்பட்டு இருக்கிறார்.
அரசியல் லாபம்
தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் லூலூ மால் வந்தால் யார் பாதிக்கப்படுவார்கள், கம்யூனிஸ்டுகள் ஏன் லூலூ மால், ஜி ஸ்கொயர் பற்றியெல்லாம் பேசுவதில்லை?
அமைச்சர் சேகர்பாபு அரசியல் லாபத்திற்காக சிதம்பரம் தீட்சிதர் விவகாரத்தில் செயல்படுகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தாய் மொழி கல்வியில் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை திரைப்பட ரீலிஸ் நிகழ்வுகளில்தான் காணமுடிகிறது. பள்ளிகளின் பக்கம் அவர் செல்வதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராஜா, மாநில பொறுப்பாளர் ஏ.பி.முருகானந்தம் உள்பட பலர் உடன் இருந்தனர்.