சர்க்கரை ஆலை முன்னாள் மேலாளர் பலி
பஸ் மீது கார் மோதிய விபத்தில் சர்க்கரை ஆலை முன்னாள் மேலாளர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
பொள்ளாச்சி
பஸ் மீது கார் மோதிய விபத்தில் சர்க்கரை ஆலை முன்னாள் மேலாளர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பஸ் மீது கார் மோதியது
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வி.கே.வி. லே அவுட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 73). சர்க்கரை ஆலையில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாந்தி(64). கணவன், மனைவி 2 பேரும் தென்சங்கம்பாளையத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு சென்றனர். காரை சாந்தி ஓட்டினார். அருகில் உள்ள முன்பக்க சீட்டில் ஆனந்தகுமார் உட்கார்ந்து இருந்தார்.
இந்த நிலையில் வால்பாறை ரோடு கரியாஞ்செட்டிபாளையம் பிரிவில் சென்ற போது, முன்னால் பொள்ளாச்சியில் இருந்து கோட்டூர் செல்லும் அரசு பஸ் சென்றது. திடீரென்று கண் இமைக்கும் நேரத்தில் அந்த பஸ்சின் பின்னால் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் ஆனந்தகுமார், சாந்தி ஆகியோரின் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.
சம்பவ இடத்திலேயே...
இதுகுறித்த தகவலின் பேரில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்தனர். மேலும் தகவல் அறிந்ததும் கோட்டூர் போலீசாரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காலை நேரம் என்பதால் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் முன்னால் சென்ற பஸ் தெரியாமல் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் சாந்தி சீட் பெல்ட் அணிந்து இருந்ததோடு ஏர்பலூன் வெளியே வந்ததால் காயத்துடன் தப்பினர். ஆனந்தகுமார் சீட் பெல்ட் அணிந்து இருந்தால் உயிர் தப்பி இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.