முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் தம்பி மகள் கைது


முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் தம்பி மகள் கைது
x

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் தம்பி மகள் கைது செய்யப்பட்டார்.

சென்னை

முன்னாள் எம்.பி. சாவு

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் டாக்டர் மஸ்தான் (வயது 66). முன்னாள் எம்.பி.யான இவர், தி.மு.க.வில் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளராகவும், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராகவும் இருந்தார்.

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி இரவு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது தம்பி மருமகன் இம்ரான் பாஷா ஓட்டிசெல்லும்போது திடீரென நெஞ்சு வலி, வலிப்பு ஏற்பட்டு கூடுவாஞ்சேரியில் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து ஏற்கனவே மஸ்தான் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மஸ்தானின் மகன் ஹரிஷ் ஷாநவாஸ், தனது தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்ததில் காரில் செல்லும்போது மஸ்தானின் மூக்கை அழுத்தி கொலை செய்தது அம்பலமானது. இந்த கொலை வழக்கில் மஸ்தானின் கார் டிரைவரும், அவரது தம்பி மருமகனுமான இம்ரான் பாஷா, அவரது சித்தி மகன் தமீம் என்ற சுல்தான், நண்பர்கள் தவுபிக் அகமது, நசீர், லோகேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தம்பி மகள் கைது

இவர்கள் 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது மஸ்தான் உடன் பிறந்த தம்பி கவுசே ஆதாம்பாஷாவுக்கும், இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் மஸ்தானின் தம்பி கவுசே ஆதாம்பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மஸ்தானின் தம்பியை போலீசார் காவலில் எடுத்து மேலும் இந்த கொலையில் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று விசாரித்த போது மஸ்தானின் தம்பி மகள் ஹரிதா ஷாஹினா(26) மஸ்தான் கொலையில் தந்தைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் மஸ்தானின் தம்பி மகள் ஹரிதா ஷாஹினாவை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இதுவரை மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பி, தம்பியின் மகள், தம்பியின் மருமகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story