தர்மபுரி மாவட்டத்தில் 102 மையங்களில் 10-ம் வகுப்பு தேர்வு:22,687 மாணவ-மாணவிகள் எழுதினர்


தர்மபுரி மாவட்டத்தில் 102 மையங்களில் 10-ம் வகுப்பு தேர்வு:22,687 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 6 April 2023 7:00 PM (Updated: 6 April 2023 7:00 PM)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் 102 மையங்களில் 22,687 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த பொதுத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக் கல்வித் துறை செய்துள்ளது. தர்மபுரி மாவட்டத்திலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதற்காக மாவட்டம் முழுவதும் 102 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன

இந்த தேர்வினை எழுதுவதற்கு 218 அரசுப்பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 5 உண்டு-உறைவிட பள்ளி, ஒரு சமூக நலத்துறையின் பள்ளி, 16 சுயநிதி பள்ளிகள் மற்றும் 85 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 332 பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 830 பேரும், தனித்தேர்வர்கள் 297 பேரும் விண்ணப்பித்தனர். பொதுத்தேர்வு தொடங்கிய முதல் நாளில் நேற்று மொத்தம் 22 ஆயிரத்து 516 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். 901 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவில்லை. 7 பேருக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

தேர்வு பணிகளில் 1,965 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 102 முதன்மை கண்காணிப்பாளர்களும், 102 துறை அலுவலர்களும், 102 பறக்கும் படை அலுவலர்களும், 24 வழித்தட அலுவலர்களும், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத உதவிக்காக 263 சொல்வதை எழுதுபவர்களும், 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் கலெக்டர் சாந்தி இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது கலெக்டர் கூறுகையில், மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை உண்மையாகவும், நேர்மையாகவும், எவ்வித அச்சமோ, பதற்றமோ இல்லாமல் எளிமையாக, மகிழ்ச்சியுடன் எழுத வேண்டும். தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் இத்தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தேவையான அனைத்து பணிகளையும் முழுமையாக மேற்கொள்வதோடு, எவ்வித தவறுகளும் ஏற்படாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.


Next Story