பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடுகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 89.69 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 89.69 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள்
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 70 அரசு பள்ளிகள், ஒரு அரசு நிதியுதவி பெறும் பள்ளி, 46 தனியார் பள்ளிகள், ஓசூர் கல்வி மாவட்டத்தில் 35 அரசுப்பள்ளிகள், 33 தனியார் பள்ளிகள் உள்பட 192 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 523 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதினர்.
இதில் 18 ஆயிரத்து 408 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 10 ஆயிரத்து 61 மாணவர்களில் 8 ஆயிரத்து 648 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 85.96 சதவீத தேர்ச்சி ஆகும். மேலும் தேர்வு எழுதிய 10 ஆயிரத்து 462 மாணவிகளில் 9,760 பேர் தேர்ச்சி பெற்றனர்; இது 93.29 சதவீத தேர்ச்சி ஆகும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் மொத்தம் 89.69 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
32-வது இடம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மாநில அளவில் 32-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த பிளஸ்-2 தேர்வில் 88.3 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் 35-வது இடத்தை பிடித்த நிலையில் தற்போது 1.5 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து 32-வது இடத்தை பிடித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 106 அரசுப்பள்ளிகளில் தொகரப்பள்ளி, சிகரலப்பள்ளி, கண்ணன்ட அள்ளி, கிருஷ்ணகிரி அரசு மாதிரிப்பள்ளி ஆகிய 4 பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.
அதேபோல் ஒரு அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் 39 தனியார் பள்ளிகள் உள்பட 44 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
இதற்கிடையே மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்ட தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து தெரிந்து கொண்டனர். அதன்படி கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து தெரிந்து கொண்டனர்.