அச்செட்டிப்பள்ளி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளியேறிய பொதுமக்களால் பரபரப்பு


அச்செட்டிப்பள்ளி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளியேறிய பொதுமக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Oct 2023 7:30 PM GMT (Updated: 2 Oct 2023 7:30 PM GMT)

அச்செட்டிப்பள்ளி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளியேறிய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

அச்செட்டிப்பள்ளி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தின்போது பாதியிலேயே வெளியேறிய கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ரேஷன் கடை

ஓசூர் ஒன்றியம் அச்செட்டிப்பள்ளி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைக்கூட்டம் எடப்பள்ளி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சீனிவாச ரெட்டி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், ஊராட்சி செயலாளர் மாதேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் எடப்பட்டி மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக கிராமசபை கூட்டத்தில் எங்கள் கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் தற்போது வரை ரேஷன் கடை கட்டவில்லை.

மேலும் இந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தையும் மாற்ற உள்ளதாக அறிகிறோம். தொடர்ந்து கிராமசபை கூட்டங்களை நடத்துகிறீர்கள். தீர்மானத்தை எழுதுகிறீர்கள். ஆனால் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றுவதில்லை என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புறக்கணிப்பு

மேலும் ஏரியில் குப்பைகளை கொட்டக்கூடாது, தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். மயானம் அமைக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் எந்த கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றவில்லை என அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை அவர்கள் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த கிராமசபை கூட்டத்தால் எந்த பயனும் இல்லை என்று கூறிய கிராம மக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதி வாசிப்பதற்கு முன்னர் ஆண்கள், பெண்கள் என அனைவரும் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு பாதியிலேயே எழுந்து சென்று விட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் 5 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story