மும்முனை மின் இணைப்பு வழங்காததால் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
மும்முனை மின் இணைப்பு வழங்காததால் குஞ்சாண்டியூரில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூர்,
மின் இணைப்பு
மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஆண்டிக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் விவசாய பயன்பாட்டுக்கு தேவையான மும்முனை மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.
ஆனால் நீண்டநாட்கள் ஆகியும் அவர்களுக்கு மின்சார இணைப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மும்முனை இணைப்பு கேட்ட விவசாயிகள் நேற்று குஞ்சாண்டியூர் உதவி பொறியாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
தீக்குளிக்க முயற்சி
அப்போது தமிழ்ச்செல்வி என்ற பெண் தன் உடலின் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் கருமலைக்கூடல் போலீசார் விரைந்து செயல்பட்டு, தமிழ்ச்செல்வியை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அனைவரும் கலைந்து சென்றனர்.