நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிளால் பரபரப்பு
திருவள்ளூர் அருகே நடுரோட்டில் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கரிக்கலவாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 24).இவரது மனைவி அர்ச்சனா (23).இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்து கொண்டிருந்தபோது அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் இன்ஜினில் இருந்து புகை வர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அந்த புகை தீயாக மாறி மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. உடனே மோட்டார் சைக்கிளில் இருந்த சந்தோஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் இறங்கி உயிர் தப்பினர்.
உடனே இது குறித்து திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர் .ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து நாசமானது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் சாலையில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.