நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்களால் பரபரப்பு....!


மீன் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை,

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள துறைமுகத்தில் மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே மீன் விற்பனை செய்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மேலபட்டினச்சேரி மீனவர்கள் பிடித்து வந்த மத்தி மீன்களை நாகூர் துறைமுகத்தில் விற்பனை செய்யக்கூடாது என கீழ பட்டினசெய்தியை சேர்ந்த மீனவர்கள் தடுத்துள்ளனர். மேலும் அந்த மீன்களை வியாபாரிகள் ஏலம் எடுக்க கூடாது எனவும் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மேலபட்டினச்சேரி மீனவர்கள் நாகூர் மெயின் ரோட்டில் விற்க முடியாமல் வைத்திருந்த மீன்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் போலீசார் போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டாததைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மீன் வண்டிகளுடன் வந்தனர். அங்கு மீன் பெட்டிகளை தரையில் வைத்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் போலீஸ் சூப்பிரண்டுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதனால் நீண்ட நேரமாக மீனவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலிலேயே காத்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story