பெரியகுளத்தில் பரபரப்பு:ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


பெரியகுளத்தில் பரபரப்பு:ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 7 Oct 2023 12:15 AM IST (Updated: 7 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இருந்தும் பெண்கள் பலருக்கு பணி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் அடையாள அட்டை வழங்கப்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அப்போது அவர்கள் கைகளில் அடையாள அட்டைகளை கொண்டு வந்தனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் போராட்டம்

இதையடுத்து அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜய் மாலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன் ஆகியோர் அங்கு வந்தனர். அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் எங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் அடையாள அட்டை எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். அப்போது வங்கி கணக்கிலும் இணைக்கப்பட்டு விடும். எனவே தாலுகா அலுவலகத்திற்கு சென்று இணைப்பை சரி செய்தால் பணி வழங்குப்படும் என்று கூறினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story