பொள்ளாச்சி அருகே பரபரப்பு:போலீஸ்காரரின் விரலை கடித்த தொழிலாளி கைது
பொள்ளாச்சி அருகே பரபரப்பு:போலீஸ்காரரின் விரலை கடித்த தொழிலாளி கைது
பொள்ளாச்சி
ஆனைமலை அருகே உள்ள நெல்லிகுத்திபாறையை சேர்ந்தவர் பிரபு. இவர் ஆழியாறு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆழியாறு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி போலீஸ்காரர் பிரபு திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) என்ற தேங்காய் உரிக்கும் தொழிலாளி, குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதை பார்த்த போலீஸ்காரர் பிரபு கணவன், மனைவி சண்டையை தடுக்க சென்றார். அப்போது அஜித்குமார், போலீஸ்காரர் பிரபுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் தகாத வார்த்தையால் திட்டியதாகவும் தெரிகிறது. இதற்கிடையில் தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அஜித்குமார், போலீஸ்காரரின் ஆள்காட்டி விரலை கடித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை சக போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் கொலை மிரட்டல் விடுத்தல், தகாத வார்த்தையால் திட்டுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.