கருங்குளம் யூனியன் பயிற்சி கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உறுப்பினரை அனுமதிக்காததால் பரபரப்பு

கருங்குளம் யூனியன் பயிற்சி கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உறுப்பினரை அனுமதிக்காததால் பரபரப்பு நிலவியது
ஸ்ரீவைகுண்டம்:
கருங்குளம் யூனியனுக்கு உட்பட்ட 31 கிராம ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர்களுக்கு கடந்த 20-ந் தேதி முதல் வருகிற 1-ந்் தேதி வரை அடிப்படை பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த 1-வது வார்டு மாற்றுத்திறனாளி உறுப்பினர் மணி மந்திரம் வந்தார்.
அங்கு வந்த அவரை அங்கிருந்த கிராம செயலர் ஒருவர் வருகை பதிவேடு நோட்டையும், பேனாவையும் கொண்டு வாசலுக்கு சென்று அவரிடம் கையெழுத்திட்டு நீங்கள் வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் நான் கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்துள்ளேன். கையெழுத்து மட்டும் வேண்டும் என்றால் நான் வீட்டில் இருக்கும்போதே வந்து வாங்கியிருக்கலாமே என்று கேட்டுள்ளார். ஆனால் அந்த செயலர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரை உள்ளே அனுமதிக்காத நிலையில் 3 மணி நேரம் வாசலிலேயே காத்திருந்துள்ளார். தகவல் அறிந்ததும் யூனியன் தலைவர் கோமதி ராஜேந்திரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவருக்கு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் பயிற்சி கூட்டத்துக்கு மணி மந்திரம் சென்றார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.