சிறப்பு மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம்


தினத்தந்தி 23 Oct 2023 12:30 AM GMT (Updated: 23 Oct 2023 12:30 AM GMT)

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். மேலும், ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

நீலகிரி

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் சுற்றுலா செல்ல முடிவு செய்தால் அதில் நீலகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இங்கு வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், வானுயர ஓங்கி வளர்ந்து காணப்படும் மலைகள் மற்றும் மரங்களும் அவர்களை சுண்டி இழுக்கின்றன.

இந்த நிலையில் சனி, ஞாயிறு வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை ஒட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.


நீலகிரிக்கு வரும் வடமாநில சுற்றுலா பயணிகள், யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுவார்கள். இதனால் மழைரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சுற்றுலா பயணிகளிடம் அதிக அளவில் போட்டி இருக்கும். இதை கருத்தில் கொண்டு கோடை சீசனுக்கு இயக்கப்பட்டதை போல் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இதன்படி நேற்று வந்த சிறப்பு மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தபடி வந்தனர். அவர்கள் வரும் வழியில் இருந்த குகைகள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

இதேபோல் ஊட்டி ெரயில் நிலையத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்த 'ஐ லவ் ஊட்டி' என்ற லோகோ அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அந்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.


இதேபோல் நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். அப்போது அங்கிருந்த மலர் அலங்காரங்களை கண்டு ரசித்தனர். மேலும் ஊட்டி ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்தனர். தென்னிந்தியாவின் மிக உயர்ந்த மலை சிகரமான தொட்டபெட்டா சென்று அங்கு இருந்த இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. சுற்றுலா பயணிகள் வருகையால் மாவட்டத்தில் நேற்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. மேலும் தற்போது மழை குறைந்து இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் ஊட்டியை வளம் வருகின்றனர்.மேலும் ஒரு சிலர் தங்கும் விடுதிகளில் அறை கிடைக்காததால் சிரமம் அடைந்தனர்.


Next Story