இளைஞர் அணி கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்


இளைஞர் அணி கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Sep 2023 7:30 PM GMT (Updated: 12 Sep 2023 7:30 PM GMT)

சேலத்தில் 27-ந் தேதி நடைபெறும் இளைஞர் அணி கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம்

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு அவைத்தலைவர் சுபாசு தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்திகேயன், துணைச்செயலாளர்கள் குமரவேல், திருநாவுக்கரசு, மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி காலை 8.30 மணிக்கு சேலம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி சேலம் கிழக்கு மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டை முன்னிட்டு வருகிற 27-ந்தேதி மதியம் 3 மணிக்கு சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள திடலில் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் உள்ள படியூரில் வருகிற 24-ந்தேதி, மேற்கு மண்டல பயிற்சி பாசறை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பெரியார், அண்ணா பிறந்த நாள் மற்றும் கட்சி தொடங்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா வருகிற 17-ந்தேதி வேலூரில் நடக்கிறது. இந்த கூட்டங்களில் சேலம் மத்திய மாவட்டத்தில் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொள்ள வேண்டும். சனாதன கொள்கைகளை எதிர்க்கும் ஒரே காரணத்திற்காக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுவதை கண்டிக்கின்றோம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன், மாநகர செயலாளர் ரகுபதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், மணி, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் கோகுல் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

====

மாவட்டம் முழுவதும்

3 காலம் படம் உண்டு


Next Story