திண்டுக்கல் காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்ட மாட்டின் உடல் தோண்டி எடுப்பு
திண்டுக்கல் காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்ட மாட்டின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.
திண்டுக்கல் காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்ட மாட்டின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.
நரபலி புகார்
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள வாடகை கட்டிடத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் உரிமையாளர் ராஜா முகமது, திண்டுக்கல் வடக்கு போலீசில் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், பசு மாட்டை நரபலி கொடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் புதைத்ததாக தெரிவித்து இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் மாடு புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்டி, அதன் உடலை வெளியே எடுத்து மருத்துவ பரிசோதனை செய்யவும் முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ரமேஷ்பாபுவிடம் காங்கிரஸ் கட்சி அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்ட மாட்டின் உடலை தோண்டி எடுக்க அனுமதி போலீசார் கேட்டனர்.
உடல் தோண்டி எடுப்பு
இதனையடுத்து வருவாய் அலுவலர் பாண்டியன், செட்டிநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அழகேசன் முன்னிலையில் மாட்டின் உடலை தோண்டி எடுக்க தாசில்தார் அனுமதி அளித்தார்.
அதன்படி மதியம் 2 மணி அளவில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே கட்சி அலுவலகத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் போலீசார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் மாடு புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. சிறிது நேரத்தில் அழுகிய நிலையில் மாட்டின் உடல் மண்ணுக்குள் புதைந்து இருப்பது தெரியவந்தது. பின்னர் மாட்டின் உடல் பாகங்கள் முழுமையாக சேதமடையாமல் அதிகாரிகள் வெளியே கொண்டு வந்தனர்.
வாக்குவாதம்-பரபரப்பு
அதன்பிறகு கால்நடை டாக்டர் அப்துல் காதர் மற்றும் மருத்துவ குழுவினர் மாட்டின் உடலுக்கு சம்பவ இடத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் அதன் உடல் பாகங்களில் இருந்து மாதிரி எடுத்து பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மாட்டின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது குறித்து தகவலறிந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்களுக்கும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த போலீசார் இருதரப்பினரையும் தடுத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.