மராட்டியத்தை போல தமிழகத்திலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம் - நயினார் நாகேந்திரன்


மராட்டியத்தை போல தமிழகத்திலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம் - நயினார் நாகேந்திரன்
x
தினத்தந்தி 23 July 2022 2:56 PM IST (Updated: 23 July 2022 3:41 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தை போல தமிழகத்திலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம் என்று நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தக்கலை,

தமிழகத்தின் மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.சார்பில் தக்கலையிலுள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

தமிழக அரசானது வீட்டு வரியை உயர்த்தி மூச்சுவிடும் நேரத்தில் மின்சார கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. இதற்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் என்ன சொல்கிறார் என்றால் மத்திய அரசு உயர்த்த சொன்னதால்தான் மின்கட்டணத்தை உயர்த்தினோம் என கூறுகிறார்.

மத்திய அரசானது எந்த காலகட்டத்திலும் எந்த அரசும் அப்படி சொல்லாது. தற்போது மத்திய அரசாங்கம் என்ன கூறியுள்ளது என்றால் தமிழகத்தில் 22 சதவீதம் லைன் லாஸ் ஆகிறது. அதை குறைக்க வேண்டும் அது போல் கடனையும் குறைப்பதற்காக முயற்சிக்கவேண்டும் என கூறியிருக்கிறார்கள்.

வீட்டு வரியை உயர்த்தவோ, மின்கட்டணத்தை உயர்த்தவோ மத்திய அரசாங்கம் கூறவில்லை. தி.மு.க. அரசாங்கம் தனது தேர்தல் அறிக்கையில் சொன்ன மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என்றதை இதுவரை கொடுக்கவில்லை.

ஆனால் நல்ல திட்டமான பெண்களுக்கான திருமண உதவி திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். இப்படி மக்களை ஏமாற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது. இன்னும் இரண்டு வருடத்தில் வரும் பாராளுமன்ற தேர்தல் முடிந்தபின் மராட்டியத்தை போல தமிழகத்திலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story