அரசு ஆஸ்பத்திரிகளில் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை -ஐகோர்ட்டு வேதனை


அரசு ஆஸ்பத்திரிகளில் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை -ஐகோர்ட்டு வேதனை
x

அரசு ஆஸ்பத்திரிகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை,

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அளவுக்கு அதிகமாக மருந்துகளை கொள்முதல் செய்ததால், அவை காலாவதியாகி விட்டது. இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது என்று அந்த ஆஸ்பத்திரியின் மருந்து கொள்முதல் அதிகாரி முத்துமாலை ராணிக்கு எதிராக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், முத்துமாலை ராணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், "அரசு ஆஸ்பத்திரியில் காலாவதியான மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் புதிது புதிதாக நோய்கள் வருகின்றன. இதற்கு என்ன காரணம்? இந்த நோய்களை மருந்து நிறுவனங்களே பரப்புகின்றனவா?" என்று கேள்வி கேட்டு, அதுகுறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

அவகாசம்

இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் டி.சுதன்ராஜ் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில், புதிய நோய்கள் குறித்தும், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் விரிவான அறிக்கை தயாரித்து வருவதால், அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற நவம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

ஏழைகள்

பின்னர், "அரசு ஆஸ்பத்திரிகளில் காலாவதி மருந்துகள் வினியோகிப்பது என்பது தீவிரமான குற்றமாகும். மருந்து நிறுவனங்களுக்கும், சுகாதாரத்துறைக்கும் தொடர்பு உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை. ஆனால், ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக ஆவணங்களில் பதிவு மட்டும் செய்யப்படுகிறது" என்று கருத்து தெரிவித்தார்.


Next Story