காலாவதியான தபால்துறை ஏ.டி.எம்.கார்டுகள்
காலாவதியான தபால்துறை ஏ.டி.எம்.கார்டுகள்
கோவை
தபால் துறையில் காலாவதியான ஏ.டி.எம். கார்டுகளை புதுப்பித்து தர தாமதிப்பதால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தபால் துறை
தபால் துறை சார்பில் கிராமப்புற, நகர்ப்புற மக்களின் சேமிப்பினை ஊக்குவிக்கும் வகையில் வணிக நோக்கம் இல்லாமல் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வங்கிகளை காட்டிலும் இங்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. தபால் துறையை நவீனப்படுத்தும் வகையில் சேமிப்பு வங்கி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த தபால் துறை சேமிப்பு வங்கிக் கணக்கு தொடங்குபவர்கள் பல்வேறு பயன்களை பெற முடியும். மறைமுக சேவை வரிகளும் கிடையாது. சேமிப்பு கணக்கு தொடங்கிய அன்றே ஏ.டி.எம். கார்டு பெற்றுக் கொள்ளலாம். இந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் அவதி
இது தவிர காசோலை வசதி, குறுஞ்செய்தி மூலம் தகவல்களை பெறும் வசதி போன்றவை உள்ளது. அத்துடன், இந்தியாவில் எந்த தபால் நிலையத்திலும் பணம் செலுத்தலாம், பணம் எடுக்கலாம். அதன்படி தபால் துறையில் இந்தியாவிலேயே 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் சேமிப்பு வங்கி கணக்குக்கு ஏ.டி.எம். கார்டு சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஏ.டி.எம். கார்டு 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அதன்பிறகு அதை புதுப்பிக்க வேண்டும். இந்த ஏ.டி.எம். சேவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது ஏ.டி.எம். கார்டு பெற்று 5 ஆண்டுகளை கடந்தவிட்டது. இதனால் 2017-ம் ஆண்டு வழங்கப்பட்ட ஏ.டி.எம். கார்டுகள் காலாவதியாகிவிட்டன. ஆகவே அதனை உடனே புதுப்பித்து கொடுக்க வேண்டும். ஆனால் பல மாதங்களாகியும் புதுப்பிக்கப்படாமல் தாமதிப்பதால் வாடிக்கையாளர்கள் அவதிப்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற தபால் அதிகாரி ஹரிகரன் மற்றும் சிலர் கூறியதாவது:-
புதுப்பித்து தர வேண்டும்
தபால் துறையின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி தபால் துறை வாடிக்கையாளர்கள் வங்கி ஏ.டி.எம்.களில் கூட சென்று 5 முறை பணம் எடுத்துக்கொள்ளலாம் என்ற வசதி உள்ளதால் இது மக்களுக்கு மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. கோவை மாவட்டத்தில் தபால் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு வழங்கப்பட்ட ஏ.டி.எம்.கார்டின் கால அவகாசம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிந்தது. இதனால், பலரின் ஏடி.எம். காரடுகள் காலாவதியாகியுள்ளது. புதிய ஏ.டி.எம். கார்டு பெற தபால் அலுவலகங்களை அணுக வேண்டி உள்ளது.
ஆனால் தபால் நிலையங்களில் அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பது இல்லை. இதுவே வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியானால் அவர்கள் வீட்டு முகவரிக்கே தாமாக முன்வந்து அனுப்பிவைத்து விடுவார்கள். தபால் கணக்கு தொடங்க ஆர்வம் காட்டும் தபால் துறை ஏற்கனவே கணக்கு தொடங்கி ஏ.டி.எம். கார்டு பெற்று அதை புதுப்பித்து கொடுக்க தயங்கி வருவது ஏன் என்று தெரியவில்லை. எனவே ஏ.டி.எம். கார்டை விரைந்து புதுப்பித்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.