கோவில் விழாவில் வெடி விபத்து; சிறுவன் சாவு


கோவில் விழாவில் வெடி விபத்து; சிறுவன் சாவு
x

கோவில் விழாவின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். பெண்கள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் அரசலூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டபோது வாணவெடி மற்றும் அதிர்வேட்டுகள் வெடிக்கப்பட்டது. இதில் வெடிகளில் ஒன்று சிதறி அங்கு கூடியிருந்த கூட்டத்திற்குள் புகுந்து வெடித்து சிதறியது.

இதில் அந்த கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் லலித்கிஷோர் (வயது 9) என்ற சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சிறுவன் லலித்கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலும் இந்த வெடிவிபத்தில் ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த புனிதா (32), திருச்சி மாவட்டம், சிக்கத்தம்பூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (36), ஷோபனாபுரம் கிராமத்தை சேர்ந்த பிரியா (21) ஆகியோர் காயம் அடைந்தனர்.

2 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமம் இல்லாமல் வெடி வெடித்த அதே ஊரைச் சேர்ந்த நீலகண்டன் (27), மணிகண்டன் (34) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story