ரூ.3 கோடிக்கு ஜாதிக்காய், ஜாதிபத்திரி ஏற்றுமதி


ரூ.3 கோடிக்கு ஜாதிக்காய், ஜாதிபத்திரி ஏற்றுமதி
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 3 மாதங்களில் ரூ.3 கோடிக்கு ஜாதிக்காய், ஜாதிபத்திரி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

கோட்டூர்

ஆனைமலையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 3 மாதங்களில் ரூ.3 கோடிக்கு ஜாதிக்காய், ஜாதிபத்திரி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

ஜாதிக்காய் சாகுபடி

பொள்ளாச்சி அருகே ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவில் ஜாதிக்காய், ஜாதிபத்திரி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆனைமலை பகுதியில் விளைவிக்கப்படும் ஜாதிக்காய், ஜாதிபத்திரி அண்டை மாநிலத்தில் விளைவதை விட உயர்தரமாக உள்ளது. சமீபகாலகமாக ஆனைமலை பகுதியில் விளையும் ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரியை ஏற்றுமதியாளர்கள் அதிக விலைக்கு போட்டி, போட்டு நல்ல விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

குறிப்பாக இங்கு கிடைக்கும் ஜாதிக்காய், ஜாதிபத்திரி தனித்துவம் வாய்ந்தது என்பதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வியாபாரிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் வாங்கி செல்கின்றனர். இதை தவிர்க்க தற்போது ஏற்றுமதியாளர்களே நேரடியாக வந்து ஜாதிக்காய், ஜாதிபத்திரியை கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு உரிய வாலம் கிடைக்கிறது. இதுகுறித்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் கூறியதாவது:-

தென்னையை விட அதிக லாபம்

ஆனைமலை தாலுகா பகுதிகளில் விளைவிக்கப்படும் ஜாதிக்காய், ஜாதிபத்திரி கேரளா மாநிலம் கொச்சிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னையை விட ஜாதிக்காய், ஜாதிபத்திரி சாகுபடியில் அதிக லாபம் கிடைக்கிறது. தற்போது ஒரு கிலோ ஜாதிக்காய் ரூ.450 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து வரும் இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு சிண்டிகேட் அமைத்து சந்தை நிலவரம் குறித்த அறியாமையை பயன்படுத்தி விவசாயிகளிடம் இருந்து மிகவும் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக லாபம் அடைந்தனர்.

இதன் காரணமாக சோமேஸ்வரர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக ஜாதிக்காய், ஜாதி பத்திரியை வாங்கி, வியாபாரிகள் கூறும் விலையை விட அதிக விலைக்கு கடந்த 6 மாதங்களாக சந்தைப்படுத்தி வருகிறோம். கடந்த 3 மாதங்களாக சுமார் 40 டன் ஜாதிக்காய், 5 டன் ஜாதிபத்திரியையும் நேரடியாக விவசாயிகளிடம் வாங்கி ரூ.3 கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. கோட்டூரில் இருந்து நேற்று சுமார் 15 டன் ஜாதிக்காய், ஒரு டன் ஜாதிபத்திரி நேரடியாக விவசாயிகளிடம் இருந்து வாங்கி ரூ.1 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story