தளி அருகே வாலிபர் சாவில் திடீர் திருப்பம்: மதுபோதையில் நண்பர்களே கொலை செய்தது அம்பலம்


தளி அருகே வாலிபர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் நண்பர்களே கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. மேலும் போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

வாலிபர் பிணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் செந்தில்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 27). இவர், தளி அருகே ஆரோப்பள்ளியில் தன்னுடைய சித்தி பாப்பம்மா வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜேந்திரன், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டது. உடல், பிளாஸ்டிக் தார் பாயால் சுற்றப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த ராஜேந்திரன் உடலில் காயங்கள் இருந்தன. மேலும் அவர், பிணமாக கிடந்த கிணறு பகுதியில் மதுபாட்டில்கள் கிடந்தன.

திடீர் திருப்பம்

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே ராஜேந்திரனை கொலை செய்தது அம்பலமானது.

இந்த கொலை தொடர்பாக தளியை அடுத்த பசவனபுரத்தைச் சேர்ந்த மஞ்சு (26), மஞ்சுநாத் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

கைதான மஞ்சு போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

ராஜேந்திரனும், நாங்களும் நண்பர்கள். கடந்த 24-ந் தேதி ராஜேந்திரனின் செல்போனை அடகு வைத்து பணம் வாங்கினேன். பின்னர் நாங்கள் மூவரும் தளியை அடுத்த கொட்டபாளையத்தில் மது அருந்தினோம். அப்போது ராஜேந்திரன் தன்னுடைய செல்போன் பற்றி கேட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த நாங்கள் இருவரும் ராஜேந்திரனை தாக்கினோம். நான் வைத்திருந்த கத்தியால் ராஜேந்திரன் வயிற்றில் குத்தினேன். இதில் அவர் இறந்தார். பின் அவரது உடலை பிளாஸ்டிக் தார் பாயால் மூடி அருகில் இருந்த கிணற்றில் வீசி விட்டு தப்பினோம். ஆனால் போலீசார் விசாரணையில் மாட்டிக் கொண்டேன்.

இவ்வாறு போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story