மதுரை-தேனி பயணிகள் ரெயில் நாளை முதல் போடி வரை நீட்டிப்பு


மதுரை-தேனி பயணிகள் ரெயில் நாளை முதல் போடி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2023 12:30 AM IST (Updated: 18 Jan 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பணிகள் நிறைவு பெற்றதால் மதுரை-தேனி பயணிகள் ரெயில் நாளை முதல் போடி வரை நீட்டிக்கப்படுகிறது. போடியில் இருந்து சென்னைக்கும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

தேனி

மதுரை-போடி ரெயில்

மதுரை-போடி இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மீட்டர்கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் திட்டத்துக்காக கடந்த 2010-ம் ஆண்டு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்தன.

தேனி வரை பணிகள் நிறைவு பெற்றதால் கடந்த ஆண்டு மதுரை-தேனி இடையே 11 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. தினமும் காலையில் மதுரையில் இருந்து புறப்பட்டு வரும் இந்த ரெயில் மாலையில் தேனியில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்கிறது.

போடி வரை நீட்டிப்பு

இந்நிலையில் தேனி-போடி இடையே அகல் ரெயில் பாதை பணிகள் நிறைவு பெற்றது. போடி வரை ரெயில் சோதனை ஓட்டம் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையரும் ஆய்வு செய்து இந்த ரெயில் பாதையில் ரெயில் இயக்க ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து மதுரையில் இருந்து தேனி வரை தினமும் இயக்கப்படும் பயணிகள் ரெயிலை போடி வரை நீட்டிக்க இந்திய ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) முதல் போடி வரை ரெயில் நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி தினமும் காலை 8.05 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 9.35 மணிக்கு தேனிக்கு வரும் பயணிகள் ரெயில், காலை 9.42 மணிக்கு தேனியில் இருந்து போடிக்கு புறப்படுகிறது. மீண்டும் மாலை 5.50 மணிக்கு போடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அந்த ரெயில் 6.15 மணிக்கு தேனிக்கு வந்தடையும். பின்னர் தேனியில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

எக்ஸ்பிரஸ் ரெயில்

தேனியில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சென்னை-மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் போடி வரை நீட்டிக்கவும் இந்திய ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி வாரத்தில் 3 நாட்கள் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் காலை 8.20 மணிக்கு ஆண்டிப்பட்டிக்கும், 8.38 மணிக்கு தேனிக்கும், 9.35 மணிக்கு போடிக்கும் வந்தடைகிறது. அதுபோல், போடியில் இருந்து இரவு 8.30 மணிக்கு அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு தேனிக்கு இரவு 8.50 மணிக்கும், ஆண்டிப்பட்டிக்கு 9.09 மணிக்கும் வரும். மறுநாள் காலை 7.55 மணிக்கு இந்த ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

போடி வரை பயணிகள் ரெயில் நீட்டிக்கப்படுவதோடு சென்னைக்கும் எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுவது தேனி மாவட்ட மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


Next Story