"கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறப்பு": அமைச்சர் அறிவிப்பு


கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அறிவிப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 26 May 2023 10:48 AM IST (Updated: 26 May 2023 11:36 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, வெப்பம் இன்னும் குறையவில்லை என்றும், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்கவேண்டும் என்றும் பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், வெயில் சுட்டெரிப்பதால், தமிழகத்தில் கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல் அமைச்சரிடம் கலந்தாலோசித்து ஜூன் 5 அல்லது 7 ஆகிய இரு தேதிகளில் ஏதாவது ஒன்றில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவுசெய்யப்படும் என்று முன்னதாக அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 7-ஆம் தேதி திறக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Next Story