திண்டிவனத்தில் பட்டப்பகலில் துணிகரம்:தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகை, பணம் பறிப்புமோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திண்டிவனத்தில் பட்டப்பகலில் தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகை, பணத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திண்டிவனம்,
4 பவுன் நகை பறிப்பு
திண்டிவனம் கலைஞர் நகரை சேர்ந்தவர் உமாசங்கர் மனைவி ரூபசேனா(வயது 38). திண்டிவனம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை தீர்த்தகுளம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.5 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு ஸ்கூட்டாில் வீட்டுக்கு புறப்பட்டார். பின்னர் அவர் தனது வீட்டு முன்பு ஸ்கூட்டரை நிறுத்த முயன்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மா்மநபர்கள் 2 பேர் திடீரென ரூபசேனா கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியையும், பேக்கில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தையும் பறித்துக் கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.
போலீசார் விசாரணை
இதில் நிலை குலைந்து கீழே விழுந்த ரூபசேனாவுக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மர்மநபர்களை விரட்டிச் சென்றனா். ஆனால் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். காயமடைந்த ரூபசேனா திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதுடன், இதுபற்றி ரோஷணை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன், நகை, பணத்தை பறித்துச் சென்ற மர்மநபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் வீட்டு வாசல் முன்பு நின்ற தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகை, பணத்தை மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் திண்டிவனம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.