பஸ்சில் வந்த பெண்களிடம் நகை-பணம் பறிப்பு
கோவையில் கூட்டத்தை பயன்படுத்தி பஸ்சில் வந்த 3 பெண்களிடம் நகை, பணத்தை பறித்துச்சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவையில் கூட்டத்தை பயன்படுத்தி பஸ்சில் வந்த 3 பெண்களிடம் நகை, பணத்தை பறித்துச்சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை-பணம் திருட்டு
பொங்கல் பண்டிகையை யொட்டி பொருட்கள் வாங்குவதற்காக கோவை கடைவீதியில் உள்ள கடைகளுக்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருகிறார்கள். இதனால் டவுன் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இந்த கூட்டத்தை பயன்படுத்தி பயணிகளிடம் இருந்து பணம், நகையை திருடுவதை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவையை அடுத்த சின்னதடாகத்தை சேர்ந்த நித்யா (வயது 32) என்பவர் பஸ்சில் கோவைக்கு வந்தார். பின்னர் அவர் ஒப்பணக்காரவீதியில் உள்ள பஸ்நிறுத்தத்தில் இறங்கியபோது அவர் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. அதற்குள் 3 பவுன் நகை, ரூ.52 ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போன் ஆகியவை இருந்தது. அதன் மதிப்பு ரூ.1½ லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
அதுபோன்று கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் கமலம் (62). இவர் லட்சுமி மில் சந்திப்பில் இருந்து வரதராஜா மில் பஸ்நிறுத்தத்திற்கு பஸ்சில் வந்தார். அப்போது அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அதை பறித்துவிட்டு சென்றது தெரியவந்தது.
மேலும் கோவை பீளமேட்டை சேர்ந்தவர் கருப்புசாமி (67). இவர் பீளமேட்டில் இருந்து விமான நிலைய சந்திப்புக்கு பஸ்சில் சென்றார். அங்கு இறங்கியபோது அவருடைய பையில் இருந்த ரூ.16 ஆயிரத்து 200-ஐ காணவில்லை. மர்ம ஆசாமிகள் அந்த பணத்தை திருடிய தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரிடம் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.