ஓரின சேர்க்கைக்கு அழைத்து என்ஜினீயரிடம் நகை, பணம் பறிப்பு
கோவையில் செல்போன் செயலி மூலம் பழகி என்ஜினீயரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து நகை, பணம் பறித்த ஜ.டி. ஊழியர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவையில் செல்போன் செயலி மூலம் பழகி என்ஜினீயரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து நகை, பணம் பறித்த ஜ.டி. ஊழியர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
என்ஜினீயர்
தென்காசியை சேர்ந்த 28 வயது என்ஜினீயர், கோவையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் சரவணம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஓரின சேர்க்கையாளர்களுக்கான செயலியை பதவிறக்கம் செய்தார். அந்த செயலியை பயன்படுத்தியபோது, கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த சூர்யா (வயது 23) என்பவருடன் என்ஜினீயருக்கு அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் அந்த செயலி மூலம் தினமும் பேசி வந்தனர்.
சரமாரியாக தாக்குதல்
பின்னர் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு, அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் சூர்யா செல்போனில் என்ஜினீயரை தொடர்பு கொண்டு உன்னை நேரில் சந்திக்க விரும்புகிறேன் என்றும், தான் தற்போது சரவணம்பட்டி இ.பி.காலனியில் தான் உள்ளேன். வீட்டிற்கு வந்தால் நீயும், நானும் ஜாலியாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
இதனை நம்பிய என்ஜினீயர் தனது காரில் சூர்யாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு சூர்யாவுடன் மேலும் 3 பேர் இருந்துள்ளனர். அவர்கள் யார் என்று என்ஜீயர் கேட்டபோது, தன்னுடைய நண்பர்கள் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
பின்னர் என்ஜினீயரை வீட்டிற்குள் அழைத்து சென்ற சூர்யா திடீரென நண்பர்களுடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
நகை, பணம் பறிப்பு
பின்னர் அதிர்ச்சியடைந்த என்ஜினீயர் செய்வது அறியாமல் திகைத்து நின்றார். பின்னர் சூர்யா தனது நண்பர்களுடன் என்ஜினீயரை கொலை செய்துவிடுவதாக மிரட்டி கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க நகையை பறித்தனர். மேலும் செல்போனை பறித்து அதில் ஆன்லைன் மூலம் ரூ.7,800-யை தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டனர்.
பின்னர் என்ஜினீயரை வீட்டில் இருந்து விரட்டிவிட்டனர். உயிர் பிழைத்தால்போதும் என்று அங்கிருந்து வெளியே வந்த என்ஜினீயர் நடந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
விசாரணையில், என்ஜினீயரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து நகை, பணம் பறித்தது கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த சூர்யா அவரது நண்பர்களான கோவிந்தன் (24), சஞ்சய் வர்க்கீஸ், மனோவா (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து சரவணம்பட்டியில் பதுங்கி இருந்த அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதில் கோவிந்தன், சஞ்சய் வர்க்கீஸ் ஆகியோர் கோவையில் ஐ.டி. ஊழியர்களாக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.