சேலத்தில், போலீஸ் எனக்கூறி வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறிப்புமர்ம கும்பலை பிடிக்க தனிப்படை தீவிரம்


சேலத்தில், போலீஸ் எனக்கூறி வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறிப்புமர்ம கும்பலை பிடிக்க தனிப்படை தீவிரம்
x

சேலத்தில் போலீஸ் எனக்கூறி திருப்பூர் வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறித்து சென்றது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சூரமங்கலம்

சேலத்தில் போலீஸ் எனக்கூறி திருப்பூர் வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறித்து சென்றது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாபாரி

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள வெங்கடாஜலம் கவுண்டர் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 37). இவர் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் செங்காந்தாள் விதையை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வெங்கடேஷ் தனது காரில் சேலம் மாவட்டம் ஓமலூருக்கு வந்து அங்குள்ள நிதிநிறுவன அதிபர் ஒருவரிடம் ரூ.50 லட்சம் கடன் வாங்கினார். பின்னர் அவர் விதை வாங்குவதற்காக அந்த பணத்துடன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் செல்வதற்காக காரில் புறப்பட்டார்.

இதனிடையே சேலத்தை அடுத்த அரியானூர் பகுதியில் காரை நிறுத்தி விட்டு ஒரு காபி கடைக்கு சென்றார். அங்கு அவர் தனது நண்பர்களான திருப்பூரை சேர்ந்த குமார் உள்பட 3 பேரை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நீங்கள் வைத்துள்ள புழக்கத்தில் இருக்கும் பழைய 500 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500 ரூபாய் நோட்டுகள் வாங்கி தருவதாகவும், இதற்காக ரூ.5 லட்சம் கமிஷன் தருவதாகவும் நண்பர்கள் கூறினர்.

பணம் பறிப்பு

மேலும் அவர்கள் வெங்கடேசிடம் இருந்து ரூ.50 லட்சத்தை பெற்று கொண்டனர். இதையடுத்து அவரது காரிலேயே 5 பேரும் இரும்பாலை அருகே உள்ள மாரமங்கலத்துப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வெங்கடேசின் காரை வழிமறித்தது. பின்னர் அவர்களிடம் தாங்கள் போலீஸ் என்றுக் கூறினர். அதில் ஒருவர் போலீஸ் உடை அணிந்திருந்தார்.

இதையடுத்து அவர்கள் வெங்கடேசிடம் நீங்கள் வைத்திருக்கும் பணம் கருப்பு பணம் எனவும், விசாரணைக்கு வருமாறும் அழைத்தனர். போலீசார் என நம்பிய வெங்கடேஷ் உள்பட 4 பேரும் அந்த கும்பல் வந்த காரில் ஏறினர். பின்னர் உருக்காலை கொரோனா மையம் அருகே சென்றதும் வெங்கடேசை மட்டும் இறக்கிவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் பணத்துடன் தப்பிச்சென்றுவிட்டது.

போலீஸ் எனக்கூறி ரூ.50 லட்சத்தை மர்ம கும்பல் தன்னிடம் இருந்து பறித்து சென்ற சம்பவம் குறித்து வியாபாரி வெங்கடேஷ் இரும்பாலை போலீசில் புகார் அளித்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன், உதவி கமிஷனர் ஆனந்தி மற்றும் இரும்பாலை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

தனிப்படைகள் அமைப்பு

பணம் பறிப்புக்கு வெங்கடேசின் நண்பர்களான குமார் உள்ளிட்டோருக்கும், இந்த கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலத்தில் போலீஸ் எனக்கூறி திருப்பூர் வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story