சேலம் புதிய பஸ் நிலையத்தில்ஊறுகாய் நிறுவன மேலாளரிடம் ரூ.35 ஆயிரம் பறித்த திருநங்கை
சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஊறுகாய் நிறுவன மேலாளரிடம் ரூ.35 ஆயிரம் பறித்ததாக திருநங்கையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஊறுகாய் நிறுவன மேலாளரிடம் ரூ.35 ஆயிரம் பறித்ததாக திருநங்கையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊறுகாய் நிறுவன மேலாளர்
சென்னையை சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் ஊறுகாய் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் சேலம் வந்த அவர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். பின்னர் அவர் இரவில் சாப்பிடுவதற்காக புதிய பஸ் நிலையம் பகுதிக்கு வந்தார். அப்போது அவரது செல்போன் தொலைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதனை தேடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த 37 வயதுடைய திருநங்கை ஒருவர் அவரிடம் நைசாக பேசினார். அப்போது உங்களது செல்போனை எடுத்தவர் எனக்கு தெரியும் என்றும், வாங்கி தருகிறேன் என்றும் கூறி அவரை ஆட்டோவில் அழைத்து சென்றார். சிறிது தூரம் சென்றதும் அவரிடம் திருநங்கை பணம் கேட்டு மிரட்டினார்.
ரூ.35 ஆயிரம் பறிப்பு
அப்போது அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி உள்ளார். இதையடுத்து திருநங்கை அவர் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை பறித்தார். பின்னர் அதன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் எடுத்து கொண்டு திருநங்கை தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ஊறுகாய் நிறுவன மேலாளர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரிடம் பணம் பறித்தது ரெட்டியூரை சேர்ந்த திருநங்கை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.