ஓய்வு பெற்ற கண்டக்டரிடம் ரூ.5 லட்சம் பறிப்பு


ஓய்வு பெற்ற கண்டக்டரிடம் ரூ.5 லட்சம் பறிப்பு
x
தினத்தந்தி 8 July 2023 3:00 AM IST (Updated: 8 July 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில், போலீஸ் எனக்கூறி ஓய்வு பெற்ற கண்டக்டரிடம் ரூ.5 லட்சம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில், போலீஸ் எனக்கூறி ஓய்வு பெற்ற கண்டக்டரிடம் ரூ.5 லட்சம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓய்வு பெற்ற கண்டக்டர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுந்தரம் நகரை சேர்ந்தவர் துரையன்(வயது 70). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது நண்பர், சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சித்திக்(40). இவர், துரையனிடம் தனக்கு தெரிந்த நபர் ரூ.5 லட்சத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து உள்ளார். 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தால் அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என்று கூறினார்.

இதை நம்பிய துரையன், தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.3 லட்சத்தை எடுத்துக்கொண்டு சித்திக்கை சந்திக்க மரப்பேட்டை பகுதிக்கு சென்றார். அங்கு அவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, தங்களை போலீசார் என்று கூறிக்கொண்டு ஒரு கும்பல் காரில் வந்தது. அந்த கும்பல் சித்திக், துரையன் ஆகியோரை காரில் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றனர். தாராபுரம் ரோட்டில் சென்றபோது, காரை நிறுத்தி ரூ.3 லட்சத்தை பறித்ததோடு சித்திக், துரையனை அங்கேயே இறக்கி விட்டுவிட்டு அந்த கும்பல் சென்றது.

5 பேர் கைது

இதுகுறித்து சித்திக், துரையன் ஆகியோர் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இதையடுத்து மீண்டும் சித்திக், துரையனிடம் 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.2 லட்சம் மட்டும் எடுத்து வாருங்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக ரூ.5 லட்சத்தை வாங்கி விடலாம் என்று கூறினார். இதை நம்பி மீண்டும் வடக்கிபாளையம் பிரிவில் வைத்து துரையன் ரூ.2 லட்சத்தை சித்திக்கிடம் கொடுத்தார். அப்போது அங்கு வந்த அதே கும்பல் போலீஸ் என்று கூறி பணத்தை மீண்டும் பறித்து சென்றது.

இதனால் சந்தேகடைந்த துரையன், பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சித்திக்கை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆனைமலையை சேர்ந்த ஹபீப் ரகுமான் (44), கண்ணன் (37), கோவை குனியமுத்தூரை சேர்ந்த சதக்கத்துல்லா (44), ஈச்சனாரியை சேர்ந்த ஆரோக்கிய தாஸ் (52) ஆகியோருடன் சேர்ந்து சித்திக் திட்டமிட்டு துரையனிடம் பணத்தை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் தாராபுரம் ரோட்டில் வைத்து பணம் பறித்தது துரையன் கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் மேற்கண்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


Next Story