தியேட்டர்களில் கூடுதல் கட்டணம்வசூலித்தால் நடவடிக்கை


தியேட்டர்களில் கூடுதல் கட்டணம்வசூலித்தால் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 10 Jan 2023 6:45 PM GMT)

துணிவு, வாரிசு திரைப்படங்கள் வெளியான நிலையில், தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

திண்டுக்கல்

துணிவு, வாரிசு வெளியீடு

அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படங்கள் இன்று (புதன்கிழமை) வெளியாகின்றன. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் இரு திரைப்படங்களும் வௌியாகும் தியேட்டர்களில் ரசிகர்கள் பிரமாண்ட வாழ்த்து பேனர்களை வைத்து உள்ளனர். இதற்கிடையே தியேட்டர்களின் உரிமையாளர்கள், ரசிகர்களுக்கு போலீசார் பல்வேறு அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் துணிவு, வாரிசு ஆகிய திரைப்படங்கள் இன்று (புதன்கிழமை) வெளியாகின்றன. இதையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

கூடுதல் கட்டணம்

தியேட்டர்களுக்கு முன்பு உயரமான பேனர்கள் வைக்கவும், பேனர்களுக்கு பாலாபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தியேட்டர்களில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணம் மற்றும் வாகனங்களை நிறுத்தவும் அதிகமாக கட்டணம் வசூல் செய்வதாக புகார் வந்தால், வருவாய்துறையினருடன் போலீசார் இணைந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் தியேட்டர்கள் முன்பு பட்டாசு வெடிப்பவர்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறியிருக்கிறார்.


Next Story