யானைகளுக்கு நவீன கருவி மூலம் கண் பரிசோதனை


யானைகளுக்கு நவீன கருவி மூலம் கண் பரிசோதனை
x
தினத்தந்தி 23 Jun 2023 2:45 AM IST (Updated: 23 Jun 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் யானைகளுக்கு நவீன கருவி மூலம் கண் பரிசோதனை செய்யப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் யானைகளுக்கு நவீன கருவி மூலம் கண் பரிசோதனை செய்யப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கண் பரிசோதனை

ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி, வரகளியாறு ஆகிய இடங்களில் வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு கலீம், சின்னதம்பி உள்பட 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அடிக்கடி யானைகளின் உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் பார்கவ தேஜா மேற்பார்வையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா கால்நடை டாக்டர் ஸ்ரீதர், ஆனைமலை புலிகள் காப்பக வனக்கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், சுகுமார் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் யானைகளுக்கு நவீன கருவி மூலம் கண்பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது வனச்சரகர் சுந்தரவேல் மற்றும் வனத்துறையினர், பாகன்கள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மருத்துவ சிகிச்சை

முகாமில் யானைகளின் வயது, எடைக்கு ஏற்ப டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் யானைகளுக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து வரும் கால்நடை டாக்டர்கள் மூலம் யானைகளுக்கு கண் மற்றும் உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது சில யானைகளின் கண்ணில் இருந்து நீர்வடிதல், கண்புரை, பார்வை குறைவு உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து தமிழன் (வயது 45), செல்வி (46), ஆண்டாள் (56), துர்கா (29), ஓய்வு பெற்ற யானை செல்வி (60) ஆகிய யானைகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஐ ஸ்கேனர் என்னும் நவீன கருவி மூலம் கண்கள் ஸ்கேன் செய்யப்பட்டது. இதையடுத்து யானைகளுக்கு கொடுக்க வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story