பாளையம்பட்டியில் கண்மாய்களை தூர்வார வேண்டும்


பாளையம்பட்டியில் கண்மாய்களை தூர்வார வேண்டும்
x

பாளையம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களை தூர்வார வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

பாளையம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களை தூர்வார வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கவுன்சிலர்கள் கூட்டம்

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சசிகலா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜா மைதீன் பந்தே நவாஸ், சூரியகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-

வாழவந்தராஜ்:- ஏ. கல்லுப்பட்டியில் குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வழங்க பணம் கட்டி ஒரு வருடங்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. டெண்டர் விடுவதை அதிகாரிகள் முன்கூட்டியே கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

வட்டாரவளர்ச்சி அலுவலர்:- வரும் காலங்களில் கவுன்சிலர்களுக்கு முறைப்படி தெரிவிக்கப்படும்.

ஆக்கிரமிப்பு

சீனிவாசன்: தேசிய நெடுஞ்சாலை கஞ்சநாயக்கன்பட்டி விலக்கில் பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கை சரி செய்யக்கோரி பலமுறை கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளேன். இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆதலால் அந்த பகுதியில் விபத்து சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. மேலும் எங்களது பணியின் காலம் ஒரு வருடம் தான் உள்ளது. எனவே எங்களுக்கு வழங்கப்படும் கவுன்சிலர் நிதியை கூடுதலாக உயர்த்தி தாருங்கள்.

கோவிந்தசாமிநாதன்: பாளையம்பட்டி ஊராட்சியில் உள்ள 3 கண்மாய்களை தூர்வார வேண்டும் என பலமுறை வலியுறுத்தினேன். இதற்கான எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. பாளையம்பட்டி 30 அடி வீதியில் சாலை நடுவே உள்ள மின் கம்பங்களை அகற்றி சாலை ஓரமாக அமைக்க வேண்டும். மதுரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

விழிப்புணர்வு

தலைவர் சசிகலா:- ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்பதில்லை என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இறுதியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முனியசாமி குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Next Story