சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக தயார் நிலையில் 39 உண்டியல்கள்


சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக தயார் நிலையில் 39 உண்டியல்கள்
x

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 39 உண்டியல்கள் தயார் நிலையில் உள்ளன.

மதுரை

அழகர்கோவில்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 39 உண்டியல்கள் தயார் நிலையில் உள்ளன.

சித்திரை திருவிழா

தென்திருப்பதி, திருமாலிருஞ்சோலை என போற்றி புகழப்படும் பெருமையுடையது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இங்கு நடைபெறும் திருவிழாவில் சித்திரை பெருந்திருவிழா தனிச் சிறப்புடையது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 1-ந் தேதி மாலையில் கோவிலில் தொடங்குகிறது. 2-ந் தேதி திருவிழா கோவில் வெளி பிரகாரத்திலேயே நடைபெறுகிறது. 3-ந் தேதி மாலையில் 6 மணிக்கு கள்ளழகர் அங்குள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் இரவு 7 மணிக்கு தங்கப் பல்லக்கில் கள்ளர் அலங்காரத்தில் புறப்பாடாகி சகல பரிவாரங்களுடன், பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவில் முன்பு வையாழி ஆகி மதுரையை நோக்கி புறப்படுகிறார்.

வழி நெடுக உள்ள மண்டபங்களில் பக்தர்களுக்கு அழகர் காட்சி தருகிறார். 4-ந் தேதி காலை 6 மணிக்கு மூன்று மாவடி பகுதியில் எதிர் சேவை நடைபெறும். தொடர்ந்து அன்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சுவாமிக்கு சாத்தி, பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நடைபெறும்.

வைகையில் இறங்கும் அழகர்

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 5-ந் தேதி கருப்பணசாமி கோவில் முன் ஆயிரம் பொன் சப்பரம் விழா நடைபெறும். தொடர்ந்து அன்று காலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கி கள்ளழகர் காட்சி தருகிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் அப்போது அழகரை தரிசனம் செய்வார்கள். 6-ந் தேதி காலை 9 மணிக்கு சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு சுவாமி எழுந்தருள்வார். மாலை 3 மணிக்கு கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருள்கிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சி நடைபெறும்.

7-ந் தேதி இரவு பூப்பல்லக்கு திருவிழா, 8-ந் தேதி கள்ளர் திருக்கோலத்துடன் வழி நடையாக அழகர், திருமலைக்கு வந்த வழியாக திரும்புகிறார். அன்றிரவு அப்பன் திருப்பதி ஜமின்தார் மண்டபத்தில் சுவாமி காட்சி தருகிறார். 9-ந் தேதி காலையில் கள்ளந்தரி வழியாக அழகர்கோவிலுக்கு அழகர் மலையான் செல்கிறார். அங்கு காலை 10.32 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சுவாமி இருப்பிடம் போய் சேருகின்றார்.

உண்டியல்கள் தயார்

10-ந் தேதி காலையில் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதையொட்டி சுவாமி மதுரைக்கு சென்று திரும்பும் வரை பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக தள்ளுவண்டி, மாட்டு வண்டி, உண்டியல்கள் உள்பட மொத்தம் 39 உண்டியல்கள் வரை சென்று திரும்புகிறது. இந்த உண்டியல்கள் கள்ளழகர் கோவில் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் சரிபார்க்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உதவி பொறியாளர்கள், உள்துறை பேஷ்கார்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story