தானியங்கி எந்திரத்தில் 10 ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சப்பை பெறும் வசதி
தானியங்கி எந்திரத்தில் 10 ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சப்பை பெறும் வசதி அமலுக்கு வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மஞ்சப்பையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் தானியங்கி எந்திரம் மூலம் 10 ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சப்பை பெறும் விற்பனை மையத்தை அமைத்துள்ளது. இந்த தானியங்கி எந்திர விற்பனை மையம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக வந்த பொதுமக்கள் பலரும் அந்த தானியங்கி எந்திரத்தில் 10 ரூபாய் நாணயம் செலுத்தி மஞ்சப்பையை பெற்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அரசின் இந்த நடவடிக்கையால் மீண்டும் தமிழர்களின் கலாச்சாரமான மஞ்சள் பைக்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டத்தின் முக்கிய இடங்களிலும் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி பகுதிகளிலும் தானியங்கி எந்திரத்தை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.